Saturday, February 9, 2008

இது வரை சொல்லாத காதல்...

இதை பற்றி நான் எழுத கூடாதுதான் இருந்தாலும் என் மன நிம்மதிக்காக சென்சார் செய்து சில வரிகள் எழுதி இருக்கிறேன். டைரி எழுதும் பழக்கம் எல்லாம் எனக்கு கிடையாது.ஆனாலும் அத்தனை அழுத்தம் திருத்தமாக நடந்தது என்ன என்று எழுத முடியாவிட்டாலும் இன்னும் பசுமையாகவே நினைவில் இருக்கின்ற நான் காதலித்த காலங்கள்.

பெரும்பான்மையான என்னுடைய அத்தனை நினைவுகள் எல்லாவற்றயும் எழுத வேண்டும் என்றோ முடியுமென்றோ நினைக்கா விட்டாலும். இன்றிருக்கும் நினைவுகள் இன்னும் இருபது வருடங்களில் இருக்கும் வாய்ப்புகள் குறைவு என்பதால் சில வரிகள் எழுதி வைப்பது பிற்காலத்தில் பழைய பொழுதுகளின் போது சூடான தேநீர் அருந்தும் இனிமையை தரும் என்பதால் இரண்டு வரி எழுதி வைக்க விரும்பினேன்.

"ஏனென்றால் இது முற்று புள்ளி வைக்கப்பட்ட
என் முதல் காதல்...
இது வரை சொல்லாத காதல்...
இன்று வரை எட்டாத காதல் ."அவளை பார்த்த முதல் தடவையே எனக்கு காதல் வரவில்லை.அப்பொழுது அவள் ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தால்.காதலிக்கவோ இல்லை அதை பற்றி நினைத்து பார்க்கவோ கூடாத வயது அது.ஆனால் வாழ்க்கையில் காதல் இப்படித்தான் வருகின்றது.

சரி இப்பொழுது என் காதலுக்கு வருகின்றேன். அதற்கு முன் என்னை பற்றி நான் அவ்வளவு அழகானவன் இல்லை. அவளுடைய குடும்பமும் சற்று நடு தரமானது தான் என்று நினைக்கின்றேன். அப்பொழுது அவள் அந்த தெருவின் அருகிலேயே உள்ள ஒரு பள்ளியில்தான் படித்து கொண்டிருந்தாள் அவளுக்கு அப்பா கிடையாது. அவளுடைய அம்மா ஒரு அண்ணன். அவனுக்கு என்னை விடவும் ஓரிரண்டு வயது அதிகம் இருக்கும். அவளுடைய அம்மாவுக்கும்,அவனுக்கும் முன்பு என்னை பிடிக்கும் என்று நினைக்கின்றேன் பேசிய பொழுதெல்லாம் நன்றாக பேசியதாய் ஞாபகம்..

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை. கேள்விப்பட்ட வரையில் அறிவும் இல்லை(சும்மா விளையாட்டுக்கு தான்)இருந்திருந்தால் நான் பேச நினைத்தவைகளை ஒரு நிமிடமாவது செவி கொடுத்து கேட்டிருப்பாள். அவளை விடவும் நான் எந்த வகையிலும் அவளுக்கு குறைந்தவன் இல்லை. ஏனோ தெரியவில்லை நாளாக நாளாக என்னை அறியாமலேயே அவளை காதலிக்க தொடங்கி விட்டேன். அந்த கால கட்டத்தில் நாம் யாரையாவது காதலித்து தொலைய வேண்டி இருக்கின்றது அந்த நிலமை எனக்கும் ஏற்பட்டது..

அது மட்டும் அல்லாமல் அவள் ரோட்டிலோ இல்லை சாதாரணமாக வேறு இடங்களில் அதிகம் பேசி பார்த்ததில்லை அதுவும் ஒரு காரணம் அவ்வளவுதான் நான் காதலில் விழுந்த கதை.பின் நடந்தவைகள் ஏராளம்...!


 அவளை நான் நிறைய தடவை பார்த்தது எல்லாமே அவள் பள்ளியில் இருந்து திரும்பி வரும் பொழுது தான் அழகா குதிரை மாதிரி(குண்டு)நடந்து வருவாள்,அப்பொழுதெல்லாம் எப்பவும் தனியாக வரமாட்டாள் யாராவது ஒரு பெண் அவள் கூடவே வருவார்கள். ஆரம்ப காலங்களில் அவள் முகத்தை கூட நான் நேராக பார்க்க மாட்டேன் அவ்வளவு பயம். ஜன்னல்களின் பின்னால் ஒளிந்து நின்று பார்ப்பேன்.பேருந்து நிலையத்தில் அவளுக்கு தெரியாமலேயே ஒளிந்து நின்று பார்த்தது.

அவளுடைய ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் தவறாமல் நான் வாங்கும் வாழ்த்து அட்டைகளை அவளிடம் தராமலேயே கிழித்து போட்டது. ஒரு சின்ன பூமி உருண்டையை அவள் வாங்கி கொடுத்ததாக என்னிடம் போய் சொல்லி ஏமாற்றியது . அது தெரியாமல் அதனை பத்திரமாக பாதுகாத்தது பின் அவள் தரவில்லை என்று தெரிந்து நடு ரோட்டில் போட்டு உடைத்தது. இவ்வளவு நடந்தது என்றாலும் நாங்கள் பேசியநிமிடங்களை தவறு நொடிகளை எண்ணி விடலாம். அவள் என்னை காதலித்தது எனக்கு தெரியும் நான் அவளை காதலித்தது அவளுக்கும் தெரியும்..

நாங்கள் பேசி பேசி மாயவில்லை, பூங்கா கடற்கரை என்று சுற்றவில்லை மனம் விட்டு பேசி உலக விசயங்களை எல்லாம் பகிர்ந்து கொள்ளவும் இல்லை. இந்த நிலையிலேயே ஒருவருக்கொருவர் புரிதல் வந்த உணர்வு இருந்தது....

எங்களுக்குள் எந்த சூழலில்-எந்த காலகட்டத்தில் காதல் வந்தது, ஆக்கிரமித்தது என்று சொல்ல முடியவில்லை. ஓசை படாமல் வந்து உட்கார்ந்து கொண்டது. இரண்டு பேருக்குள்லும் காதல் இருந்தது பல சந்தர்ப்பங்களில் உறுதியானது. எனக்கு இருந்த அதே உணர்வு அவளுக்கும் இருந்தது எனக்கு தெரியும். என்ன பயன் கடைசி வரை என் காதலை அவள் ஏற்று கொள்ளவும் இல்லை.! மறுக்கவும் இல்லை..!


நினைவுகள் தான் எத்தனை
விசித்திரமானவை..


என்றோ நாம் சிரித்ததை
இன்று நினைத்து பார்த்தால்
அழுகை வரும்.
என்றோ நாம் அழுததை
இன்று நினைத்து பார்த்தால் சிரிப்புதான் வரும்..

2 comments:

சத்யா said...
This comment has been removed by a blog administrator.
சத்யா said...

தீ குச்சிகளை
தேடிக்கொண்டிருக்காதீர்கள்
அவளிடம் கேளுங்கள்
சிரிப்பில் இருந்து நெருப்பை
உண்டாக்குவது எப்படி என்று.
என் கல்லறைக்கு
வரும் போதாவது
அவளை பார்த்து யாராவது கேளுங்கள்
அந்த புன்னகைக்கு என்ன அர்த்தம் என்று..!

good one